JUDAS

 

முந்நூறு பணமும், முப்பது வெள்ளிக்காசுகளும்

                                                                                                                  

                  வேதாகமத்தில் மத்தேயு 26, யோவான் 12, மாற்கு 14-ஆம் அதிகாரங்களில் இரண்டு எதிர்மறையான நிகழ்வுகளைக் குறித்தும், இரண்டு எதிர்மறையான நபர்களைக் குறித்தும் வாசிக்கின்றோம்.

 1.          நிகழ்வு 1: இயேசுகிறிஸ்து பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டில் இருக்கிறார். அப்பொழுது ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற 'நளதம்' என்னும் தைலத்தை இயேசுகிறிஸ்துவின் தலையில் (சிரசில்) ஊற்றினாள்.அப்பொழுது 'சிலர்' விசனமடைந்து, 'இந்தத் தைலத்தை வீணாகச் செலவழிப்பானேன்? இதை முந்நூறு பணத்திற்கு அதிகமான விலைக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுத்திருக்கலாமே? 'என்று முறுமுறுத்தார்கள். (மத் 26 :6-9 / மாற்கு 14: 3-5 / யோவான் 12:5 )

 

2.          நிகழ்வு 2: யூதாஸ்காரியோத்து பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய், 'நான் இயேசுகிறிஸ்துவை உங்களுக்குக் காட்டிக் கொடுக்கிறேன். நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள்?'' எனக் கேட்கிறான். முப்பது வெள்ளிக்காசு கிரயமாகக் கொடுக்க உடன்படுகின்றனர் (மத் 26 :14,15 / மாற்கு 14: 43-45 / யோவான் 12:4)

 மேற்கண்ட இரண்டு நிகழ்வுகளையும் மாற்கு 14-ஆம் அதிகாரத்தில் காண்கிறோம். மாற்கு 14-ஆம் அதிகாரத்தின் முன்பகுதியில், GOD is greater than MONEY  என்று விசுவாசிக்கும் ஸ்திரீயையும், அதே அதிகாரத்தின் பின்பகுதியில் MONEY is important than GOD என நம்பி மோசம் போன யூதாஸ்காரியோத்தையும் குறித்து வாசிக்கின்றோம்.

பாவியாகிய ஸ்திரீ

பாவியாகிய ஸ்திரீ என்று லூக்கா 7:37-ல் வாசிக்கிறோம். இயேசுகிறிஸ்துவுக்கு முக்கியத்துவம் தந்ததால் மாற்கு 14-ஆம் அதிகாரத்தில் முகவரியில்லாத ஸ்திரீயின் பெயர் வேதாகமத்தில் வெளிப்பட்டது. விலையேறப்பெற்ற 'நளதம்' என்னும் தைலத்தை இயேசுகிறிஸ்துவின் பாதங்களில் பூசி, தன் தலைமுடியால் அவருடைய பாதங்களைத் துடைத்த ஸ்திரீயின் பெயர் மரியாள்' என்று (யோவான் 12:3)  வாசிக்கிறோம்.

 அப்பொழுது 'சிலர்' விசனமடைந்து, 'இந்தத் தைலத்தை வீணாகச் செலவழிப்பானேன்? இதை முந்நூறு பணத்திற்கு அதிகமான விலைக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுத்திருக்கலாமே? 'என்று முறுமுறுத்தார்கள். 'சிலர் விசனமடைந்து முறுமுறுத்தார்கள்' என்று   மாற்கு 14: 4-5-ல் வாசித்தோமே. அது வேறு யாருமல்ல. இயேசுகிறிஸ்துவைக் காட்டிக் கொடுத்த 'யூதாஸ்காரியோத்து தான்' என்று வேதாகமம் யோவான் 12:4-ல் தெளிவாகக் காட்டிக் கொடுத்து விடுகிறது.

 யூதாஸ்காரியோத்து தரித்திரரைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை சுமக்கிறதாலும் இப்படிச் சொன்னான் என்றும் வாசிக்கிறோம். (யோவான் 12:5-6)

 முந்நூறு பணத்திற்கு அதிகமான விலையுடையத் தைலத்தைக் காட்டிலும் இயேசுகிறிஸ்து உன்னதமானவர் (GOD is greater than MONEY)  என்று மரியாள் விசுவாசித்தாள். ஆகவே, இயேசுகிறிஸ்து அவர்களை நோக்கி, "என்னிடத்தில் நற்கிரியைச் செய்திருக்கிறாள்; தன்னால் இயன்றதைச் செய்தாள்” . என்றார் (மாற்கு 14: 6-8).

மேலும் "இந்த சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசிங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக பாவியாகிய ஸ்திரீ (லூக்கா 7:37-ல்) இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்றார். (மாற்கு 14:9).

இதன் மூலம், (GOD is greater than MONEY)  என்று மரியாளைப் போல வாழ்பவர்கள் நித்திய மகிமையும், கீர்த்தியும் அடைவதை வேதம் சொல்லுகிறது

 சீடனான யூதாஸ்

 அப்பொழுது (Simultaneously) பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து பிரதான ஆசாரியரிடத்திற்கு போகிறதைக் குறித்து வாசிக்கிறோம் (மத் 26 :14 , மாற்கு 14:9).

               இயேசுகிறிஸ்துவைவிட, முப்பது வெள்ளிக்காசை யூதாஸ்காரியோத்து விலையேறப்பெற்றதாக (MONEY is important GOD) கருதினான். அதனாலேயே, இயேசுகிறிஸ்து, "எந்த மனிதனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனிதன் பிறக்காமல் இருந்திருந்தால், அவனுக்கு நலமாயிருக்கும்" என்றார். (மாற்கு 14:21).

 இயேசுகிறிஸ்துவைக் காட்டிக் கொடுத்த பின்னர், யூதாஸ்காரியோத்து இயேசுகிறிஸ்து மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு மனஸ்தாபப்பட்டான். அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியரிடத்திற்கு திரும்ப கொண்டு வந்து, "குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக் கொடுத்தினால் பாவம் செய்தேன்" என்றான். அதற்கு அவர்கள் "அது உன்பாடு" என்றார்கள். (மத் 27:3-4)

யூதாஸ்காரியோத்து முப்பது வெள்ளிக்காசை தேவாலயத்தில் எறிந்து விட்டு நான்றுகொண்டு செத்தான். (மத் 27:5) அநீதத்தின் கூலியினால் யூதாஸ்காரியோத்து ஒரு நிலத்தைச் சம்பாதித்து , தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறுவெடித்துகுடல்கள் சரிந்து போனது (அப் 1: 18) குறித்து வாசிக்கின்றோம்.

பிரதான ஆசாரியரோ அந்த முப்பது வெள்ளிக்காசை எடுத்து, அது இரத்தக்கிரயமானதால், காணிக்கைப் பெட்டியிலேப் போடாமல், அந்நியரை அடக்கம் செய்வதற்கு குயவனுடைய நிலத்தை அதினாலே கொண்டார்கள். இதனால் அந்த நிலம் இந்நாள்வரைக்கும் “இரத்தநிலம்” என்றே அழைக்கப்படுகிறது, (மத் 27:3-8).

அந்த நிலம் இரத்தநிலம் (அக்கெல்தமா) என்று வேதம் சொல்லுகிறது (அப் 1: 19). சங்கீத புத்தகத்தில் யூதாஸ்காரியோத்தின் வாசஸ்தலம் பாழாகக்கடவது; ஒருவனும் அதில் வாசம்பண்ணாதிருப்பானாக என்றும்; அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன் என்றும் எழுதியிருக்கிறது (அப் 1: 20).

 மறுபுறம், (MONEY is important GOD) என்று யூதாஸ்காரியோத்து போல வாழ்பவர்களின் பரிதாப நிலையையும், அனுபவிக்க முடியாமல் மரணிப்பதையும்  வேதத்தின் மூலம் தெளிவாகப் புரிந்துக் கொள்ள முடிகிறது.

நிஜவாழ்க்கையில் கூட உழைத்து சம்பாதிக்காமல், குறுக்கு வழியில் ஈட்டிய பணத்தை தங்கள் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க முடியாமல் போன பெரும் பணக்காரர்களையும், ஊழல் செய்து சுருட்டிய பணத்தை தங்கள் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க முடியாமல் போன அரசியல்வாதிகளையும், கையூட்டாக பெற்ற‍ பணத்தை தங்கள் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க முடியாமல் போன அரசு அதிகாரிகளையும்  நாம் பார்க்கிறோம். பின்னர், அவர்கட்கு சம்பந்தமில்லாத யார்யாரோ அந்த சொத்தை அனுபவிப்பதையும் நாம் காண முடியும்.

பரிசுத்த வேதாகமத்தில்

· நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும்,......சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன் மேல் நம்பிக்கை வைக்கவும், (1 தீமோ 6:17)

·        தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான் (நீதி 11:28)

·        தன் ஐசுவரியத்தைக் குறித்து மேன்மை பாராட்ட வேண்டாம் (எரே 9:23)


என்று வாசிக்கிறோம்.

 

 "உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும், கர்த்தரைக் கனம் பண்ணு. அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சைரசம் புரண்டோடும்" என்று வேதம் சொல்லுகிறது. (நீதி 3:9-10).

   கர்த்தரை கனம் பண்ணுவதோடு, உண்மையாக உழைத்து சம்பாதிக்கும் பணத்தால் மட்டுமே மனஅமைதி, நிம்மதி, சமாதானத்தைப் பெற்றுத் தர முடியும்.

 


Comments

Popular posts from this blog